ஜூலை 27- சர்வதேச
போர் சட்டங்களுக்கு சிறிதும் சட்டை செய்யாத வகையில் காஸா மீதான கண்மூடித்தனமான
தாக்குதலினால் உலக நாடுகளின் வெறுப்பைப் பெற்றுக் கொண்டதோடு இஸ்ரேல் நாடு
உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட போகின்றது என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு
துறை ஆலோசகர் ஸ்பிக்னியூ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்
தெரிவிக்கையில்,
“இஸ்ரேலியப் பிரதமர்
பென்யமின் மிகப் பெரிய தவறிழைத்து விட்டார். பென்யமின் ஹமாஸ் அமைப்பின்
ஆயுதங்களைக் களையப் போகிறோம் என்ற பெயரில் யுத்தம் தொடுத்தமையானது பொருத்தமற்றது.
ஏனெனில் ஹமாஸ் அமைப்பானது பலஸ்தீனிய அரசுடன் இணைந்து கூட்டாட்சி ஏற்படுத்தியிருந்த
போது, ஹமாஸ் இஸ்ரேலுடன் சுமூகமான முறையிலேயே தீர்வொன்றை பெற
முயன்றனர் என்பது வெளிப்படையாகும். அதனை இஸ்ரேலிய அரசு பயன்படுத்தியிருக்க
வேண்டும்.
மாறாக மூன்று இஸ்ரேலிய
வாலிபர்களை கடத்திக் கொலை செய்தமையானது ஹமாஸ் இயக்கம்தான் என்று எந்தவொரு
நிரூபிக்கப்பட்ட ஆதாரமுமின்றி இஸ்ரேலிய அரசு ஹமாஸ் இயக்கத்தின் மீதான தாக்குதலை
ஆரம்பித்தது. இக் குற்றச்சாட்டு பொதுமக்களை தம் மீது அனுதாபம் கொள்ளச்
செய்வதற்காகவே சோடிக்கப்பட்டதாகும்.
இஸ்ரேலிய அரசின் தற்போதைய
தான்தோன்றிச் செயலானது அனைத்துலக நாடுகளின் வெறுப்பை சம்பாத்தித்துக்
கொண்டுள்ளதுடன், இனி வருங்காலங்களில் இஸ்ரேல் நாட்டுடனான உறவுகளில் விரிசலை
ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் இயக்கத்தினரால்
மூன்று இஸ்ரேலிய வாலிபர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டமையை கண்டித்தே தாக்குதல்
நடாத்துகிறோம் என்று கூறிவந்த இஸ்ரேல் அரசு நேற்று வெள்ளிக்கிழமை வாலிபர்களை
கடத்திக் கொலை செய்தவர்கள் ஹமாஸ் அமைப்பின் கீழ் இயங்குபவர்கள் அல்லர், ஹமாஸ்
அமைப்பிற்கும் அக்கொலை சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என ஊடகங்கள் மத்தியில்
ஒப்புக்கொண்டுள்ளமை இஸ்ரேலிய அரசை சர்வதேச அரங்கில் அப்பட்டமான போர்க்
குற்றவாளியாக இனங்காட்டியுள்ளது.
இஸ்ரேலின் பொலிஸ் ஊடக
பேச்சாளர் மிக்கி ரோஷனபெல்ட் நேற்றைய தினம் ஊடகம் மத்தியில் ஹமாஸ் இயக்கத்திற்கும்
வாலிபர் கொலைக்கும் சம்பந்தமில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். ஆக காஸா மீதான இஸ்ரேலிய
அரசின் தாக்குதல் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையே ஆகும்” எனத்
தெரிவித்துள்ளார்.
Tags
உலகம்