நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த பணம்படைத்த கேடுகெட்ட சமூகத்தை நினைக்கையிலேயே..!!

(Mm.mohamed Kamil)
ஸக்காத் நிதி சரியாக பங்கிடப்படாததன் விளைவு இன்று எமது ஊரில் பிச்சைகாரர்களின் படையெடுப்பு.


இந்த இழி நிலைக்கு வித்திட்டவர்கள் யார்? ஏழைகளின் வரியை சரியாக பங்கிடாததன் விளைவு பிச்சைக்காரர்களின் உருவாக்கத்தின் பங்குதாரர்கள் ஆகும் எமது சமூகத்தின் பணக்கார கயவர்கள்.

வட்டிக்கு வரிந்துகட்டிக்கொண்டு முன் உரிமை கொடுக்கும் இவர்கள் ஸக்காத் என்றதும் பின்வாங்குவது ஏனோ..!! இந்த நயவஞ்சகத்தை அல்லாஹ் அனுமதிப்பானா?

இன்று காலை தொடக்கம் கல்முனை நகரின் வீதியெங்கும் சன நெரிசல் அனைவரினதும் முகங்களிலும் ஏதோ ஒரு ஏக்கம் ஆறில் இருந்து அறுபதுவரை யாசகனாய் போய் வீதியில் அலைவதினால் கண்ட பலன் ஒன்றுமே இல்லை ஐந்திற்கும் பத்திற்கும் அலைந்ததுதான் மிச்சம்.

நோன்பின் மாண்பே செத்துப்போய்விட்டது என்று எண்ணத்தோன்றுகின்றது .

தர்மம் தர்மம் என்று எத்தனை பள்ளிவாசல்களில் விடிய விடிய மார்க்கப் பிரசங்கம் முழங்கினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல பணம் படைத்தவர்கள் எல்லாம் வீட்டின் கதவுகளை மூடிவிட்டு குப்புறப்படுப்பதில் இருந்தே தெரியவில்லையா? இந்த உலகம் வெகு விரைவில் அழியப்போகின்றது என்று.

ஏழை வரியை ஒழுங்குற செலுத்தாமல் சேமிக்கும் செல்வம் நிலைக்குமா? நிச்சயமாக இல்லை.

எமது உடன்பிறப்புகளை இந்த கண்ணியத்திற்கு உரிய ரமழான் மாதத்தில் பிச்சைக்காரர்களாக தெருவுக்கு தெரு கையேந்த விட்டவர்களின் மறுமை நிலையை எண்ணிப்பார்க்கும் பொழுது வேதனையாக இருக்கின்றது.

எமது சமூகமே நீ சிந்திக்க மாட்டாயா?

உனது செல்வத்தை தூய்மையாக்க உனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நீ தவற விடலாமா? வட்டிக்கு முன்னிற்க தயங்காத நீ ஏழைவரியை பகிர்ந்தளிக்க தயங்குவது ஏனோ..!

எல்லாம் வல்ல இறைவா இந்த கண்ணியமிக்க ரமழான் மாதத்தில் எமது சமூகத்துக்கு நல்ல விடிவையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்ப்படுத்தி அருள் புரிவாயாக!! ஆமீன்

எமது சமூகத்தை சேர்ந்த செல்வந்தர்களுக்கு நல்ல சிந்தனையையும் ஸக்காத் தொடர்பான அறிவையும் வழங்கி ஏழைகளின் வரியை உரிய நேரத்தில் செலுத்த அருள் புரிவாயாக ..!!

அதே போல எடுத்ததற்க்கெல்லாம் கையேந்தும் சமூகமாக எமது சமூகத்தை ஆக்கிவிடாமல் பாதுகாப்பாயாக.

எமது சமூகத்தில் உள்ள வறுமையை போக்கி எமது சமூகத்தை பாதுகாத்து அருள் புரிவாயாக ஆமீன். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அல்ஹம்துலில்லாஹ் - புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.

Post a Comment

Previous Post Next Post

Contact Form