23
-07-2014
செய்தியறிக்கை:
ஜுன் 12ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் பெளத்த பிக்கு எவரும் தாக்கப்படவில்லை என குறித்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மெளலவி பொலிஸ் மா அதிபரிடம் முறையீடுசெய்துள்ளார்.
அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முழந்தாளிட்டு மன்னிப்புக்கோருமாறு பலவந்தப்படுத்தப்பட்டபோது தனக்கு ஒரு பௌத்த பிக்கு உதைத்ததாகவும் அவர் தனது முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய ஷூறா சபை வலியுறுத்தியுள்ளது!
அளுத்கமையில் பதிராஜகொட விகாரைக்கு அருகில் வைத்து பௌத்த பிக்கு ஒருவரைத் தாக்கியதாக முன்வைக்கப்பட்ட பிழையான முறைப்பாட்டின் அடிப்படையில் ஜூன் 12ஆம் திகதி முதல் தானும் தனது இரு சகோதரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், அளுத்கம பொலிஸ் நிலையத்தில் அவர்கள் அங்கிருந்த பிக்குமார் முன்நிலையில் முழங்காலில் நடந்து சென்று மன்னிப்புக்கோருமாறு பலவந்தப் படுத்தப்பட்டதாகவும், அச்சந்தர்ப்பத்தில் தனது கழுத்தில் ஒரு பௌத்த பிக்கு உதைத்ததாகவும், மௌலவி முஹம்மது அமீன் முஹம்மது அஷ்கர் அலி அவர்களால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக பக்கச்சார்பற்றதும், வெளிப்படையானதுமான விசாரணை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்த தேசிய முஸ்லிம் அமைப்பான தேசிய ஷூறா சபை (NSC) வலியுறுத்துகின்றது.
ஜூன் 12 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் வைத்து மதிப்புக்குரிய மெளலவி ஒருவருக்கு பெளத்த பிக்கு ஒருவர் உதைத்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பல உயர் அரசியல்வாதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த வேளையில் இடம்பெற்றமையை தேசிய ஷூறா சபை மிக மன வேதனையுடன் கன்டிக்கின்றது.
பதிராஜகொட சம்பவம் தனது சகோதரருக்கும் பிக்குவின் சாரதிக்கும் இடையில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு வழிவகுத்த ஒரு சிறிய வாக்குவாதமாகும் எனவும் இறுதியில் மன்னிப்புக் கோரி அது முடிவடைந்ததாகவும் எந்தவொரு கட்டத்திலும் எவராலும் பிக்கு தாக்கப்படவில்லை எனவும் மௌலவி அவர்களின் முறைப்பாட்டில் வழியுறுத்தியுள்ளார்.
மௌலவி அஷ்கர் அலி தனது இரு சகோதரர்களுடன் விளக்கமறியலில் இருந்து வெளியே வந்த பின்னர் பொலிஸ் மா அதிபரிடம் மேற்கொண்ட முறையீட்டின் பிரகாரம், அளுத்கம பொலிஸ் நிலையத்தில் சாரதிகள் விசாரிக்கப்பட்டபோது, இந்தச் சம்பவத்தில் தான் தாக்கப்படவில்லை என குறித்த பெளத்த பிக்கு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார் எனவும் மெளலவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிக்கு எந்த விதமான அசௌகரிய தோற்றமும் இன்றி மூன்று நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் குறித்த பொலிஸ் நிலையத்தில் இருந்துள்ளார் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த்து.
எனினும், “பெளத்த பிக்கு ஒருவர் குண்டாந்தடியை வைத்திருக்கும் முஸ்லிம் ஒருவரால் தாக்கப்பட்டார்” என வதந்தி பரவியதைத் தொடர்ந்து பல பிக்குகளும், சாதாரண பொதுமக்களும் அங்கு கூடியதன் பின்னர் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதான அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அளுத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘இந்த மூவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யப்பட வேண்டுமாயின், குறித்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் வேண்டும்’ என அழுத்தம் கொடுத்தவர்களை வேண்டிக் கெண்டுள்ளார் என பொலிஸ் மா அதிபரிடம் மௌலவி அவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்குவின் உடலில் எவ்வித காயங்களும் இல்லாததால் அவரைக் கொண்டு சென்ற முதலாவது வைத்தியசாலை அவரை அனுமதிப்பதற்கு மறுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து மற்றொரு வைத்தியசாலையில் குறித்த பிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையில் காயங்கள் எதுவும் இருந்ததாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இரண்டாவது வைத்தியசாலை குறித்த பிக்குவை காரணங்கள், அறிகுறிகள் இன்றி மூன்று தினங்கள் வைத்தியசாலை கட்டிலில் வைத்திருந்தன் காரணமான “பிக்கு தாக்கப்பட்டார்” என்ற வதந்தி நாடுபூராகவும் காட்டுத் தீ போல் பரவியது என தேசிய ஷூறா சபைக்கு அறியக்கிடைத்துள்ளது. எனவே, உண்மையைக் கண்டறிவதற்கு இவ்விடயங்கள் பற்றி விரிவாக விசாரணை செய்யப்படுதல் வேண்டும்.
பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் நிலையத்தில், மௌலவி அவர்கள் உள்ளிட்ட மூன்று சகோதரர்களும் பொலிஸ் நிலையத்தில் திரண்டிருந்த பல பிக்குமார்களிடம் முழங்காலில் நடந்து சென்று அவர்களிடம் மன்னிப்புக்கோருமாறு பலவந்தப்படுத்தப்பட்டதையும் அம்மூன்று சகோதரர்களும் பிக்குமாரிடம் அவ்வாறு முழங்காலில் நடந்து சென்ற போது மௌலவி அவர்கள் ஒரு பிக்குவின் உதைக்கு ஆளாகியதையும் அதனால் அவரது களுத்தில் உதை விழுந்ததையும் அதன் பின்னர் அவர்கள் பொலிஸ் கூண்டில் இடப்பட்டதையும் அறிந்து தேசிய ஷூறா சபை மிகுந்த கவலையும் வேதனையும் அடைகின்றது.
இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு போதும் பெளத்த பிக்கு ஒருவர் முஸ்லிம்கள் எவராலும் தாக்கப்பட்டது கிடையாது. இந்த விடயத்தில் கூட, இரண்டு சாரதிகளுக்கும் இடையிலான பிரச்சினையில் பிக்குவைத் தாக்குவதற்கான எவ்வித நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு பௌத்த பிக்குவைப் போன்றே மிகவும் கண்ணியப்படுத்தப்படுகின்ற மெளலவி ஒருவரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கிய சம்பவமும் இதற்கு முன்னர் ஒரு போதும் இடம்பெறவில்லை.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) குறித்த மௌலவி அவர்களின் முறைப்பாட்டை சட்டமாஅதிபரிடம் ஆற்றுப்படுத்தியதையும் முறைப்பாடு தொடர்பாக புதிதாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சட்டமாஅதிபர் பொலிஸ்மாஅதிபரிடம் கோரியதையும் தேசிய ஷூறா சபை வரவேற்கின்றது. சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்திடம் சட்டமாஅதிபர் அளித்த வாக்குறுதியையும் தேசிய ஷூறா சபை விருப்புடன் வரவேற்கின்றது.
உண்மையைக் கண்டறிவதற்காக மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் பொலிசார் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், வெளிப்படையானதுமான விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கை முஸ்லிம்கள் கோருகின்றனர். பௌத்த பிக்கு தாக்கப்படுகின்றார் என்னும் பொய் வதந்தியை பொது பல சேனா (BBS) பயன்படுத்தி சம்பந்தப்பட்ட சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களினுள் அப் பிரதேசத்தில் மன்னிக்கவே முடியாத ‘முஸ்லிம் விரோத’ பிரசாரத்தை மேற்கொண்டு, அடுத்த மணித்தியாலத்தில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர் அடங்களாக மூன்று படுகொலைகளுக்கும், எண்ணற்ற மக்கள் காயமடைவதற்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெருமளவு சொத்துகளின் அழிவுக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் மீதான என்றும் ஆறாத அதிர்ச்சித் தாக்குதலுக்கும் வழிவகுத்தது.
தாரிக் மஹ்மூத்
தலைவர்
தேசிய ஷூறா சபை
Tags
இலங்கை