முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின்
உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள்
வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தகைய முயற்சி வெற்றி பெறுவது உலக அளவில் இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில் தைமஸ் என்று
அழைக்கப்படும் கழுத்துக்கணையம் என்பது உடலின் முக்கிய உறுப்பு. மனிதர்களுக்கு இது
இதயத்துக்கு மேலே கழுத்துப்பகுதிக்கு கீழே அமைந்திருக்கும். இரண்டு பிரிவாக
இருக்கும் இந்த கழுத்துக்கணையம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது.
காரணம் இந்த கழுத்துக்கணையத்தில் தான் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மைக்கு மிக
மிக அவசியமான டி செல்கள் முதிர்ச்சியடைந்து ஒட்டுமொத்த உடலுக்கும் பரவுகின்றன.
இந்த டி செல்கள் தான் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கான அடிப்படை கவசமாக
செயற்பட்டு, மனித உடலுக்குள் புகமுயலும் எல்லாவிதமான
நோய்க்கிருமிகளையும் தடுத்து தாக்கி அழிக்கின்றன.
இப்படிப்பட்ட
கழுத்துக்கணையத்தைத்தான் தற்போது ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் ஒரு விலங்கின் உடலுக்குள் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள்.
முதல்கட்டமாக எலியின் கருப்பையில் இருக்கும் சிசுவின் உயிர்க்கலன்களை
பிரித்தெடுத்த விஞ்ஞானிகள்,
அவற்றை தைமஸ் எனப்படும்
கழுத்துக்கணையத்தில் இருக்கும் உயிர்க்கலன்களைப்போல மாற்றி அமைத்தார்கள். இந்த
உயிர்க்கலன்களுடன் கழுத்துக்கணையத்தில் இருக்கும் மற்ற துணை உயிர்க்கலன்களுடன்
இணைத்து, இந்த எல்லா உயிர்க்கலன்களையும் மீண்டும் எலியின்
உள்ளே கொண்டுபோய் பதிய வைத்தனர்.
இப்படி பதியப்பட்ட
தனித்தனி செல்கள் ஒன்றாக சேர்ந்து புத்தம்புது கழுத்துக்கணையமாக உருவெடுத்தன.
இப்படி உருவான கழுத்துக்கணையம் இயற்கையான கழுத்துக்கணையத்தைப்போல டி செல்களை
உற்பத்தி செய்து இயங்கவும் துவங்கியது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு விஞ்ஞான
கூடத்தில் மனித மூளையை வளர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின்போது கருவுற்ற ஒன்பது வார
சிசுவின் மூளையை உருவாக்கி விஞ்ஞானிகள் செய்த அதே மாதிரியான சாதனை மற்றும் உடல்
உறுப்புக்களின் செயற்பாட்டை இந்த கழுத்துக்கணையத்தின் உருவாக்கத்திலும்
விஞ்ஞானிகள் எட்டியிருக்கிறார்கள். இந்த இரண்டு பரிசோதனைகளின் வெற்றிகளும் மனித
உயிர்க்கலன்களைக்கொண்டு மனித உறுப்புக்களை தனித்தனியாக மீளுறுவாக்கம்
செய்யமுடியும் என்கிற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக சொல்கிறார் இந்த
ஆய்வில் பங்கேற்ற பேராசிரியை கிளேர் பிளாக்பர்ன்.
குறிப்பாக கழுத்துக்கணையக்
குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் எலும்பு மஜ்ஜைக்கான மாற்று ஏற்பாடுகள்
தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக
அவர் தெரிவித்தார்.
ஆனாலும் அவர் கூறும்
பலாபலன்கள் மனிதர்களுக்கு எட்டவேண்டுமானால் இந்த ஆய்வு மேலும் பல படிநிலைகளை
கடந்து வரவேண்டி இருக்கும். முதலாவது எலியின் சிசுவுக்குள் சாத்தியமான இந்த
மருத்துவ சாதனை மனிதர்களிலும் சாத்தியமாகுமா என்பதில் துவங்கி, இப்படி உருவாக்கப்படும் மனித உறுப்புக்களின்
வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போய் அது புற்றுநோயாக உருவெடுக்குமா என்பது தொடர்பான
சந்தேகங்களையெல்லாம் இந்த ஆய்வுகள் கடக்கவேண்டி இருக்கும்.
இப்படி பல தடைகளை
கடக்கவேண்டியிருந்தாலும்,
பழுதடைந்த இயந்திரங்களின்
உதிரி பாகங்களை கழற்றிவிட்டு புதிய பாகங்களை மாட்டி இயந்திரத்தை மீண்டும்
இயக்குவதைப்போல பழுதடைந்த உடல் உறுப்புக்களுக்கு மாற்றாக, அதே உடலின் ஒரு சில உயிர்க்கலன்களை ஒன்றிணைத்து
நினைத்த மாத்திரத்தில் தேவைப்படும் உடல் உறுப்புக்களை உருவாக்கி பொறுத்திக்கொள்ள
முடியும் என்கிற சாத்தியப்பாடு நினைத்துப் பார்க்க முடியாத விஞ்ஞான அதிசயமாக
கருதப்படுகிறது.
Tags
தொழிநுட்பம்