துனிஷியாவின் பாலைவனத்தின் நடுவே திடீரென தோன்றிய ஏரி


துனிஷியாவில் பாலைவனத்தின் நடுவே திடீரென தோன்றிய ஏரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை காண சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். துனிஷியா வறண்ட பாலைவனத்தில் அமைந்துள்ள ஆப்ரிக்க நாடாகும். இங்கு பாலைவனத்தின் மத்தியில் திடீரென மணல் சரிந்து பெரிய பள்ளம் தோன்றி அதில் நீரூற்று ஏற்பட்டது. சில நாட்களில் அது பல ஹெக்டேர் பரப்பில் ஏரியாக மாறி விட்டது. பாலைவனப் பகுதியில் திடீரென ஒரு ஏரி உருவானது, விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காப்சா பீச் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த தீடீர் ஏரியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், நிபுணர்களும் குவிந்து வருகின்றனர்.




இவ்வாறு திடீர் ஏரி தோன்றுவதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. உள்ளூர் மக்கள் இதை மிகப் பெரிய அதிசயமாக விமர்சிக்கின்றனர். சிலர் இது தெய்வத்தின் சாபம் என்று பேசத் துவங்கி விட்டனர். இந்த ஏரியில் மக்கள் அவசரப்பட்டு குளிக்கக்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீரூற்று தோன்றிய நாளில் அது ஊதா நிறத்தில் இருந்தது. ஓரிரு நாளில் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறி விட்டது. இந்த தண்ணீரில் குறைந்த கதிர்வீச்சு தன்மை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த ஏரியில் குளித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 வாரத்திற்கு முன்பு மாடு மேய்க்கும் சிலர்தான் இந்த திடீர் ஏரியை கண்டுபிடித்தனர். தற்போது, சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் ஒரு மில்லியன் கன அடி நீருடன் சுமார் 10 முதல் 18 மீட்டர் ஆழத்துடன் இந்த ஏரி காணப்படுகிறது. இதுகுறித்து புவியியல் நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘நில அதிர்வு காரணமாக இவ்வாறு தோன்ற வாய்ப்புள்ளதுஎன்றனர். ஆனால் இன்னும் முழுமையான ஆய்வுகள் எதுவும் செய்து முடிக்காமல் எதுவும் கூறுவதற்கில்லை என்றும் தெரிவித்தனர். துனிஷியா உலகிலேயே அதிகமான பாஸ்பேட் தாது மணற் சுரங்கங்கள் நிறைந்த பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post

Contact Form