கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்! கல்வி அமைச்சு


க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி கணித பாடத்தில் சித்திபெற வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் உயர்தரம் கற்க வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாமல் போகும் மாணவர்களை தொடர்ந்தும் பாடசாலை கட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்குடன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனாவின் ஆலோசனைக்கமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.


இப்புதிய சுற்று நிருபத்துக்கு அமைவாக 2013 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதரத்துக்கு தோற்றி உயர்தர வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட
கலைப் பிரிவு அல்லது உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிகளுக்கு உட்பட்ட பாடநெறிகளை கற்க விரும்பும் மாணவர்களும் உள்வாங்கப்படுவார்கள். என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.


26/ 2014 ஆம் இலக்க சுற்றுநிருபம் நேற்று சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு பாடசாலையில் இருப்பார்களேயாயின் அவர்களுக்கு மேலதிக வகுப்பொன்றை நடத்த வேண்டும் என்ற விடயமும் உள்வாங்கப் பட்டுள்ளது. க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாத நிலையில் உயர்தரம் கற்கும் காலத்திலும் கணித பாடத்தில் சித்தியடையாது போனாலும் அவர் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும்.

ஆனால் அவர் பல்கலைக்கழக அனுமதியின் போது கணித பாடம் கட்டாயமாக தேவைப்படும் பாடநெறிகளை கற்க முடியாமல் போகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பல்கலைக்கழக பிரவேசத்தை எதிர்பார்க்கும் ஒருவர் கட்டாயம் இரண்டு வருடத்திலும் அடுத்தடுத்து கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form